search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுவை அரசு பொது மருத்துவமனை"

    புதுவை அரசு பொது மருத்துவமனை தன் தகுதிகளையும், பெருமைகளையும் ஒவ்வொன்றாக இழந்து வருகிறது என்று சட்டசபையில் தி.மு.க. உறுப்பினர் சிவா வேதனையாக கூறியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் தி.மு.க. உறுப்பினர் சிவா பேசியதாவது:-

    புதுவை அரசு பொது மருத்துவமனைக்கு மிகப் பெரிய வரவேற்பும், புண்ணியமும் கடந்த காலங்களில் இருந்தது. இன்று கொஞ்சம், கொஞ்சமாக பொது மருத்துவமனை தன் தகுதிகளையும், பெருமைகளையும் ஒவ்வொன்றாக இழந்து வருகிறது. அங்கிருந்த பிரேத பரிசோதனை கூடம் உள்ளிட்ட முக்கிய பிரிவுகள் அரசு மருத்துவ கல்லூரிக்கு மாற்றப்பட்டு உள்ளது.

    இதனால் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனை பிரிவை கொண்டு வர வேண்டும். அரசு மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை செய்தவர்களில் எத்தனை பேர் இறந்துள்ளனர் என்பதை தெரிவிக்க வேண்டும்.

    சுகாதாரத்துறை அமைச்சர் வாரம் ஒருமுறை மருத்துவமனைகளுக்கு சென்று நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிய வேண்டும். ஒரு மாதத்துக்கு தேவையான மருந்துகள் கூட கையிருப்பு இல்லை. அந்த அளவிற்கு புதுவை மருத்துவமனை உள்ளது.

    இதே நிலைதான் மற்ற மருத்துவமனைகளிலும் நிலவுகிறது. 2001-ல் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவி வாங்கப்பட்டது. அது, 16 ஆண்டுகள் இயங்கியது. பிறகு அக்கருவி பழுதானதும் தனியாரிடம் ஒப்பந்தம் போடப்பட்டு நோயாளிகள் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்து வருகின்றனர். இதற்காக அரசு இதுவரை எவ்வளவு செலவு செய்துள்ளது என்பதை தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    ×